பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை நீக்க வேண்டும் என கூறும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களே, தற்பொழுது குறித்த சலுகைகளைப் பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனராஜகருணா தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் இன்று(27.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனராஜகருணா இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஹர்ஷனராஜகருணா, “மக்கள் விடுதலை முன்னணியினர் பெயர் மாற்றம் செய்துள்ள போதும், அதே கட்சியிலிருந்த முக்கிய உறுப்பினர்களே, தேசிய மக்கள் சக்தியிலும் இருக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் விசித்திரமானது. இவர்கள் அனைத்து விதமான செயற்பாடுகளையும் 21ம் திகதியின் பின்னரே முன்னெடுக்கவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், வாகன அனுமதிப் பத்திரம், உத்தியோகபூர்வ வீடுகளை நீக்குவதாகக் கூறுகின்றனர். இதனைக் கூறுகின்றவர்களும் ஓய்வூதியத்தை தற்போது பெறுகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் அனைவரும் இத்தகைய சலுகைகளைப் பெறுகின்றனர்.
சலுகைகளை வேண்டாம் என்று கூறிய ஒருவரேனும் மக்கள் விடுதலை முன்னணியில் உள்ளனரா?” எனக் கேள்வி எழுப்பினார்.