இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் ஆட்ட நிறைவில் இங்கிலாந்து அணி வலுவான நிலையிலுள்ளது.
இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் இன்று(29.08) ஆரம்பமாகிய இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டான் லோரன்ஸ் 9 ஓட்டங்களுக்கும், அணித் தலைவர் ஒலி பொப் 1 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒரு புறம் ஜோ ரூட் நிதானமாக துடுப்பெடுத்தாட, மறுபுறம் டான் லோரன்ஸ் 40 ஓட்டங்களுக்கும், ஹரி ப்ரூக் 33 ஓட்டங்களுக்கும், ஜமி ஸ்மித் 21 ஓட்டங்களுக்கும், க்றிஸ் வோக்ஸ் 6 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 143 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.
இலங்கை பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும், இங்கிலாந்து அணி முதலாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 358 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. கஸ் அட்கின்சன் 74 ஓட்டங்களுடனும், மத்தியூ பொட்ஸ் 20 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க, லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி நாளை(30.08) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கை அணி – தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, நிசன் மதுஷ்க, பத்தும் நிசங்க, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய
இங்கிலாந்து அணி – ஒலி பொப்(அணித் தலைவர்), ஹரி ப்ரூக், பென் டக்கெட், டான் லோரன்ஸ், ஜோ ரூட், ஜமி ஸ்மித், க்றிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மத்தியூ பொட்ஸ், ஷொயீப் பஷீர், ஒலி ஸ்டோன்