அனுர வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி

அனுர வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி

ஜே.வி.பி.யின் கொள்கைகளை சுமந்து வரும் அநுரகுமார திசாநாயக்க வடக்கு மக்களை அச்சுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கில் மக்களை அச்சுறுத்தியது தொடர்பில் வடக்கு தமிழ் மக்களிடமும் தென்னிலங்கை மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதேசத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

அன்று நாங்கள் அரசமைத்த போது அனுரவும் சஜித்தும் இருக்கவில்லை. இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் இல்லை. இப்போது அவர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்றனர். எல்லாவற்றையும் சீர்குலைக்கவே முயற்சிக்கின்றனர். கஷ்டப்பட்டு 02 வருடங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டோம்.

ஐ.எம்.எப் அமைப்புடன் ஆலோசித்து அவர்களின் நிபந்தனைகள் பிரகாரம் செயலாற்றினோம். அதன் பலனாக ரூபா வலுவடைந்தது. அதனால் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. அந்த சலுகை மக்களுக்கும் கிடைக்கிறது.

அடுத்த ஐந்து வருடங்களில் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவோம். கல்வியை பலப்படுத்துவோம். அதற்காக வேலைத் திட்டங்கள் உள்ளது. அதனால் தான் ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று சொல்கிறேன். அனுவரவும் சஜித்தும் திட்டங்கள் இல்லாததால் இயலாது ஸ்ரீலங்கா என்றே சொல்லில்கொள்ள வேண்டும்.

நாட்டில் வரிகளைக் குறைத்தால் மீண்டும் பணத்தை அச்சிட நேரிடும். அதனால் ஐ.எம்.எப் சலுகைகள் கிடைக்காது. அதனை செய்ய வேண்டுமா? எனவே, ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதே எனது தேவையாகும். 2023 முன்னெடுத்த திட்டங்களுக்கு தற்போது பலன் கிடைக்கிறது. 2024 இ்ல் செய்தவைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும்.

அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது ‘தெற்கு மக்கள் மாற்றம் ஒன்றுக்காக ஒன்றுபட்டிருக்கும் போது வடக்கு மக்கள் அதற்கு மாறான தீர்மானத்தை எடுத்தால் தெற்கு மக்களின் மனோபாவம் எவ்வாறு இருக்கும்’ என்று கேட்டிருக்கிறார். அப்படிச் சொல்வது வடக்கு மக்களை அச்சுறுத்துவதாகும்.

2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாங்கள் கூறினோம். மக்கள் வாக்களித்தனர். ஆனால் சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்தனர். அதற்காக மஹிந்த ராஜபக்‌ச யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்த தெற்கிலிருந்து ஆட்களோடு வரவில்லை.

தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்த போது சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவை தெரிவு செய்தனர். அப்போதும் கோட்டாபய ராஜபக்‌ஷ வடக்கு மக்களை அச்சுறுத்த வரவில்லை.

ஆனால், ஜே.வீ.பி மக்களை அச்சுறுத்துகிறது. அனுரவிற்கு வெற்றிபெற்ற அனுபவம் இல்லை. அவர் வெல்வதற்கான சாத்தியமும் இல்லை. வடக்கு மக்களின் சட்டரீதியான பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம். எனவே, மக்களை அச்சுறுத்தியதையிட்டு ஜேவீபியினர் வெட்கப்பட வேண்டும். அனுர திசாநாயக்க இதற்காக வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக சிங்கள மக்களைப் பயன்படுத்திக் கொண்டதால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எனவே, விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமை வடக்கு மக்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பாதுகாப்போம். எனவே செப்டம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது அபிவிருத்தியும் வராது.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version