திருடர்கள் கூட்டத்தைக் காப்பாற்றவே ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர நினைக்கிறார் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
திருடர்களும் தங்கள் திருட்டுக்களை மறைக்கவே ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடையச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மன்னாரில் நேற்று(10.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சஜித் பிரேமதாச இன, மத, மொழி பேதம் பார்க்காமல் அனைவரையும் இணைத்து ஆட்சியமைக்கின்ற ஒரு ஜனாதிபதியாகவே நினைக்கின்றார். எனவே ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எமது கட்சி முன்னெடுத்திருக்கின்றது.
இதற்காக நாம் மேலும் உழைக்கப் போகின்றோம்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ச்சியாகப் பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பதற்கான விரைவான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான முன்னாயத்த கூட்டமாக மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று(10.09) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்