வங்குரோத்தடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்க அனுரகுமார தந்திரக் கூட்டமைப்புக்கு இடம் அளிப்பதா எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு சந்தர்ப்பம் வழங்குவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 47 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 12 ஆம் திகதி களுத்துறையில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாகவும் ஆங்கில மொழிக் கல்வி தகவல் தொழில்நுட்பக் கல்வி போன்றவற்றை மேம்படுத்துவோம்.
இளைஞர்களின் தேர்ச்சி மட்டத்தை அதிகரிப்போம். அதன் ஊடாக தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு நவீன அறிவை வழங்குவோம்.
ரணசிங்க பிரேமதாச 200 ஆடை தொழிற்சாலைகள் உருவாக்கி தொழிற்துறையில் ஏற்படுத்திய புரட்சியின் அடுத்த கட்டமாக ஏற்றுமதியையும் அறிவையும் மையமாகக் கொண்ட பொருளாதார விருத்தியை உருவாக்கி மக்களை வலுப்படுத்துவோம்.
காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதோடு வீடுகளையும் அமைத்துக் கொடுத்து வீட்டுக் கனவை நனவாக்குவோம். விவசாயத்தையும் மீனவத் தொழிலையும் மேம்படுத்துவதோடு எரிபொருள் நிவாரணத்தையும் பெற்றுக் கொடுப்போம்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.