திசைக்காட்டியின் யோசனையில் பாரிய வரவு செலவுதிட்ட இடைவௌி – ரணில்

திசைக்காட்டியின் யோசனையில் பாரிய வரவு செலவுதிட்ட இடைவௌி - ரணில்

திசைகாட்டிக்கும் அநுர குமாரவுக்கும் வாய்ப்பளிக்கச் சென்று இலங்கையின் இளைஞர் சமூகம் தமது எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை இழக்க வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.

புத்தளத்தில் நேற்று (13.09) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“அனுரவிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்டேன். அநுரவின் வரவு செலவு திட்ட யோசனைகள் ரூபாவை வலுவிழக்கச் செய்யும். அதனால் 500 ரூபாய் வரையில் டொலர் அதிகரிக்கும். என்ற விடயங்களை அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் யோசனைகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டினேன்.

அதில் அநேகமான யோசனைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களுக்கு முரணாகவே காணப்பட்டது. நாம் நாணய நிதியத்துடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி அவர்கள் எமக்கு கடன் பெறுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

அதற்கு அமைவாகவே அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளது. ஆனால் திசைக்காட்டியின் யோசனையில் பாரிய வரவு செலவுதிட்ட இடைவௌி காணப்படுகிறது. அதனை நிவர்த்திக்க அவர்கள் கடன் பெற வேண்டியிருக்கும். அவ்வாறு கடன் பெறும் பட்சத்தில் IMF உடன்படிக்கை மீறப்படும். அதன் பலனாக IMF உடன்படிக்கையிலிருந்து விலகினால் ரூபாவின் பெறுமதி சரிவைச் சந்திக்கும்.

ரூபாவை பலப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையினையே ஐஎம்எப் முதலில் விதித்தது. அதன்படி செயற்பட்டதாலேயே இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கிறது. அதனால் கேஸ், எண்ணெய்,உணவு போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளன. சமூர்த்தி போன்று மூன்று மடங்கு நிவாரணம் வழங்க முடிகிறது.

நாம் படிப்படியான சலுகைகளை வழங்கி வாழ்க்கை சுமையை குறைப்போம். இன்று நாட்டிற்கு மீண்டும் வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருக்கிறோம். வரி செலுத்தும் வரம்பை 5 இலட்சத்திலிருந்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருக்கிறோம். அதனால் வரிச்சுமை ஓரளவு குறையும்.

புதிய நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் எம்மிடம் உள்ளது. அதற்காக பயணத்தை ஆரம்பித்துள்ள வேளையிலேயே மாற்றியமைக்க வேண்டுமா என்பதை மனதில் கொண்டு சிலிண்டருக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால். சிலிண்டரும் இருக்காது ரூபாவின் பெறுமதியும் பாதுகாக்கப்படாது.” என்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version