வடக்கின் அபிவிருத்தியை போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் இன்று (14.09) முற்பகல் இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அநுரவுக்கும் சஜித்திற்கும் இன்றுள்ள முறைமையை மாற்றி தமது முறைப்படி செல்ல வேண்டும். வாழ்க்கைச் சுமையை குறைப்பதாகவும் வரியை குறைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் ஐஎம்.எப் உதவி கிடைக்காது. அந்த நிலையில் வீழ்ச்சி ஏற்படும். நான் ஐஎம்எப் உடன் கலந்துரையாடி ரூபாயை பலப்படுத்தினேன்.
370 ரூபாயாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 300 ரூபாயாக குறைந்துள்ளது. பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இன்னும் விலைகள் குறைய வேண்டும். மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்க வேண்டும். எமக்கு கடன் வழங்க வேண்டாம் எனவும் பணம் அச்சிடக் கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் நிதி திரட்டவே வரி அதிகரிக்கப்பட்டது. வரி அதிகரித்ததால்தான் வருமானம் அதிகரித்து ரூபாயின் பெறுமதி உயர்ந்தது. அதனால் ஓரளவு நிவாரணம் வழங்க முடிந்தது.
உழைக்கும்போது அறவிடும் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 5 இலட்சம் மட்டத்தில் இருந்து வரி செலுத்தும் மட்டத்தை 7.5 இலட்சமாக அதிகரித்துள்ளோம். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. அதனால் வாகன இறக்குமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 3,4 வருடங்களின் பின்னர் வீழ்ச்சி ஏற்படாது.
அநுரவும் சஜித்தும் வரியை குறைப்பதாக கூறுகின்றனர். நானும் வரியை குறைக்க விரும்புகிறேன். தற்போதைய நிலையில் அவ்வாறு செய்தால் இப்போதைய முன்னேற்றம் பாதிக்கப்படும். 2022 மே – ஜுன் மாதம் போன்ற நிலை ஏற்படும்.
சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நிலைக்கு முன்னேற வேண்டும்.முதலீட்டாளர்கள் முதலீடுகளை ஆரம்பிக்கும்வரை இளைஞர் யுவதிகளுக்கு சில வாய்ப்புகளை வழங்க வேண்டும். அடுத்த வருடம் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்க இருக்கிறோம். விவசாய நவீன மயமாக்கலையும் மேற்கொள்ள இருக்கிறோம்.
உலக சனத்தொகை இரண்டு பில்லியன்களால் உயர இருக்கிறது. அதில் சிறு குழுவுக்காவது உணவு வழங்கும் நிலையை உருவாக்க வேண்டும். பழமையான விவசாய முறைகள் அன்றி நவீன விவசாய முறைகளின் ஊடாக உற்பத்தி அதிகரிக்கும், வருமானம் உயரும்.
மாகாண சபைகளை பலப்படுத்தி வழங்க வேண்டிய அதிகாரங்களை வழங்குவதாக எனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளேன். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பதற்கு 9 மாகாண சிற்றரசுகள் தேவை.அந்தந்த பிரதேச அபிவிருத்திகளை அவை பெறுப்பேற்று மேற்கொள்ள வேண்டும்.தேசிய காணி ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும். பல விடயங்களை மேற்கொள்ள உடன்பட்டுளோம். உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்க இருக்கிறோம். நவாஸ் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக காணமல் போனோர் தொடர்பான பிரச்சினையை 5 வருடங்களில் நிறைவு செய்ய இருக்கிறோம்.
தமிழர் பிரச்சினையை தீர்ப்பதோடு தமிழ் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தீர்க்க இருக்கிறோம். அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் அன்றி அபிவிருத்தியும் மேற்கொள்ள இருக்கிறோம். காங்கேசன்துறையில் முதலாவது முதலீட்டு வலயம் உருவாக்கப்படும். இரண்டாம் கட்டம் பரந்தனிலும் மூன்றாம் கட்டம் மாங்குளத்திலும் ஆரம்பிக்கப்படும்.
படகுச்சவாரிகளை ஆரம்பிக்க வேண்டும். புலிகள் காலத்தில் படகோட்டியவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு வருமான வழியாக இருக்கும்.
இங்கு டிஜிட்டல் வலயமொன்றையும் உருவாக்க இருக்கிறோம். யுத்தத்துடன் தொடர்புடையவர்களை இணைத்துக் கொண்டு நவீன விவசாயத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.அவர்களுக்கும் எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எமது கடற்றொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.
பூகரில் சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையம் ஆரம்பிக்க இருக்கிறோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வும் அபிவிருத்தியும் சமமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அநுர குமார முன்னர் மாகாண சபை முறைக்கு எதிராக போரடினார். தெற்கில் பாரிய யுத்தம் செய்தனர். அதற்கு எதிரானவர்களிடம் உறுதி மொழி பெற்றனர். தமிழ் மக்களை அச்சுறுத்தியதற்கு எதிராக நாம் யாழ்ப்பாணத்தில் அநுரவை விமர்சித்திருந்தேன். அதற்கு அவர் எனக்கு ஏசியுள்ளார். நான் ஏதாவது தவறாகச் சொன்னேனா? சுமந்திரன் தான் அவரை பாதுகாக்கிறார்.
நான் பொருளாதார பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினால் அவரால் பதில் வழங்க முடியாது.அவர் என்னை விவாதத்திற்கு அழைத்தார். ஆனால் இதுவரை அதற்கான அழைப்பு கிடைக்கவில்லை. நான் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில் வழங்க முடியாது. சஜித்தைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. இந்த இரு வேட்பாளர்களினாலும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வராது.
கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினால் கேசும் இல்லை. யாழ்ப்பாணத்திற்கு அபிவிருத்தியும் இல்லை” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.