
தமிழரசுக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு பலர் பிரிந்து போயுள்ள நிலையில், அந்த கட்சியின் அதிருப்தியாளர்கள், அல்லது அந்த கட்சியில் இருந்து விலகியவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையலாம் என் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ் பொதுக் கட்டமைப்பு பாராளுமன்ற தேர்தலில் “சங்கு” சின்னத்தில் போட்டியிடாமல், பிறிதொரு பொது சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் பேசுச்சுவார்தைகள் இடம்பெற்று வருவதாகவும் கிடைத்த தகவலை உறுதி செய்வதற்காக வி.ஆனந்தசங்கரியை தொடர்பு கொண்ட போது, “ஆயுதம் தாங்கி போராடி கரை படிந்தவர்களை தமது கட்சியில் இணைக்கமாட்டோம் என அவர் தெரிவித்தார். ஆனால் தமிழரசுக் கட்சியில் மாவை சேனாதிராஜா தவிர்ந்த வேறு எவர் தமது கட்சியியல் இணைய வந்தாலும் அதற்கு இடம் வழங்கப்படும்” எனவும் அவர் கூறினார். அத்தோடு பொது கட்டமைப்பில் உள்ள கட்சிகளோடு இணைந்து தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமற்றது எனவும் கூறினார்.
தமது கட்சி சின்னத்தில் யார் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது, யார் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அந்த விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வழங்க முடியுமெனவுவம் அவர் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.