இலங்கைக்கு இன்னிங்ஸ் வெற்றி – தொடரும் இலங்கை வசம்

இலங்கைக்கு இன்னிங்ஸ் வெற்றி - தொடரும் இலங்கை வசம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது. தொடரின் இரண்டாவதும் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதனூடாக இலங்கை தொடரைக் கைப்பற்றியது.

போட்டியின் நான்காம் நாளான இன்று(29.09) இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 514 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியில் போராடிய நியூசிலாந்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி சார்பில் க்ளென் பிலிப்ஸ் 78 ஓட்டங்களையும், மிட்செல் சான்ட்னர் 67 ஓட்டங்களையும், டாம் ப்லுண்டெல் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணி சார்பில், தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடும் நிஷான் பீரிஸ் 6 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும் தனஞ்சய டி சில்வா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்யதனுடாக 2-0 என்ற ரீதியில் தொடரையும் கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கையின் கமிந்து மென்டிசும், தொடரின் ஆட்ட நாயகனாக பிரபாத் ஜயசூரியவும் தெரிவு செய்யப்பட்டனர்.

மூன்றாம் நாள் விபரம்:      

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க நியூசிலாந்து அணி போராடி வருகின்றது. இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்துக்கு 5 விக்கெட்டுக்கள் மாத்திரம் மீதமுள்ள நிலையில் 315 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று(28.09) முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. அபாரமாகப் பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர்களான பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்டுக்களையும், தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடும் நிஷான் பீரிஸ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் நியூசிலாந்து அணி 514 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த நிலையில், Follow On முறைப்படி மீண்டும் நியூசிலாந்தை துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை பணித்தது.

அதற்கமைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நியூசிலாந்து சார்பில் டெவோன் கான்வே 61 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை சார்பில் பந்துவீச்சில்  நிஷான் பீரிஸ் 3 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.

தற்பொழுது நியூசிலாந்து சார்பில் டாம் ப்லுண்டெல் 47 ஓட்டங்களுடனும், க்ளென் பிலிப்ஸ் 32 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு மேலும் 315 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  

இரண்டாம் நாள் விபரம் மற்றும் கமிந்துவின் சாதனைகள்:

இலங்கையின் சகலத்துறை ஆட்டக்காரரும், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரருமான கமிந்து மென்டிஸ் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டதில் இருந்து வேகமாக 1000 ஓட்டங்களை கடந்த நான்காவது வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் 1924ம் ஆண்டு இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சட்க்ளிப் மற்றும் 1949ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளின் எவர்டன் வீக்ஸ் ஆகியோர் 12 இன்னிங்ஸில் 1000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்திருந்தனர். பின்னர், 1930ம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த சேர் டொனால்ட் பிரட்மன் 13 இன்னிங்ஸில் 1000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்தார். இந்த சாதனையையே கமிந்து மென்டிஸ் 94 வருடங்களின் பின்னர் சமன் செய்துள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸின் போது ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களைப் பெற்றதனூடாக அவர் இந்த சாதனையைச் சமன் செய்தார்.

மேலும், குறைந்த இன்னிங்ஸில் 5 டெஸ்ட் சதங்களைக் கடந்த டொனால்ட் பிராட்மேனின் சாதனையையும் கமிந்து மென்டிஸ் சமன் செய்தார். இதனூடாக 13 இன்னிங்ஸில் 5 டெஸ்ட் சதங்களைக் கடந்த முதலாவது ஆசிய வீரராகவும் இவர் பதிவானார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று(27.09) நடைபெற்றது. முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

நேற்றைய நாள் ஆரம்பத்தின் போது களத்திலிருந்த அஞ்சலோ மெத்தியூஸ் 88 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்தடுத்து களத்திற்கு வந்த தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இறுதிவரை களத்திலிருந்த குசல் மென்டிஸ் 106 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 182 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் க்ளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுக்களையும், டிம் சவுதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

முதலாம் நாள் விபரம்: 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம்(26.09) ஆரம்பமாகியது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தைப் பெறவில்லை என்ற போதும், போட்டியின் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க ஒரு ஓட்டத்துடன் முதலாவது ஒவரிலேயே ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்த தினேஷ் சந்திமல், திமுத் கருணாரத்னவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, களத்திற்கு வந்த அஞ்சலோ மெத்தியூஸ் நிதானமாக துடுப்பெடுத்தாடினார். மறுபுறம் தினேஷ் சந்திமல் தனது 16வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 116 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களத்திற்கு வந்த கமிந்து மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூசுடன் இணைந்து ஆட்டம் நிறைவடையும் வரை களத்திலிருந்தனர். அஞ்சலோ மெத்தியூஸ் 78 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 51 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். தொடர்ந்து 8 டெஸ்ட் போட்டிகளில் 50க்கு கூடிய ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக கமிந்து மென்டிஸ் பதிவானார்.

இதன்படி, இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையிலிருந்தது.

இலங்கை XI: தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், நிஷான் பீரிஸ், பிரபாத் ஜயசூரிய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ

நியூசிலாந்து XI: டாம் லாதம், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி(அணித் தலைவர்), அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version