
மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி மல்லசேகர என்பவரின் துரித நடவடிக்கையினால் மன்னார் பிரதான பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம்(29.09) மன்னார் நகரில் அமைந்துள்ள பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி மல்லசேகர பணிபுரிந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கையில் கடிதமொன்றுடன் வந்துள்ளார்.
பெண்ணிடம் குறித்த பொலிஸ் அதிகாரி நீங்கள் யாரென வினாவியபோது, கையிலிருந்த கடிதம் மற்றும் கைத்தொலைபேசியை பொலிஸ் அதிகாரியின் மேசையில் வைத்துவிட்டு மன்னார் பாலம் இருக்கும் திசை நோக்கி ஓடியுள்ளார்.
பெண்ணை பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரி, பாலத்தின் பாதுகாப்புச் சுவரில் ஏறி கடலில் குதிக்க முயற்சித்த குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
காப்பாற்றப்பட்ட அவரை, மன்னார் பொலிஸார் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தில் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்