இஸ்ரேல் மீது ஈரான் வான் வழித் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் வான் வழித் தாக்குதல்

இஸ்ரேலை நோக்கி ஈரான் நேற்று(01.10) ஏவுகணைகளை ஏவியிருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாகவும், பல நூறு ஏவுகணைகள் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய விமானப்படையால் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சேத விபரங்கள் தொடர்பில் உரியத் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த தாக்குதலுக்கு பின் விளைவுகள் இருக்கும் என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க இராணுவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஈரானிய தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாக்கவும், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துமாறும் பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறும், பாதுகாப்புப் படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. சைரன் சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version