பாரியளவிலான இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டுப் பிரஜைகள் கம்பஹா மற்றும் ஹன்வெல்ல பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கம்பஹா ஹோட்டல் மற்றும் அவிசாவளையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் 30 சீன பிரஜைகள், 4 இந்தியப் பிரஜைகள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 499 கைத்தொலைபேசிகள், 25 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்க்டாப் கணினிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் சமூக ஊடக தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பல தெற்காசிய நாடுகளிலுள்ள பொதுமக்களை இலக்கு வைத்தே இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.