
கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில திட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று(08.10) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:
அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ‘வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகார செயலகம்’, ‘பங்கேற்பு ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான மக்கள் சபை முறையை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சபை செயலகம்’ மற்றும் ‘விவசாய நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்’ ஆகியவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்கள் / ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் கருமங்களைத் தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக அமுல்படுத்தவதற்கான இயலுமை இருப்பதனால், அதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் / ஆலோசகர்களின் சேவையைக் கடந்த மாதம் 30ம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அமைச்சரவையைத் தெளிவுபடுத்திய பின்னர், அமைச்சரவை அதற்கான ஒப்புதலை வழங்கியது.