2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு(12.10) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இலங்கை சார்பில் அணித் தலைவி சமரி அத்தபத்து 35(41) ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து சார்பில் பந்து வீச்சில் லகாஸ்பெரெக், அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
116 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 17.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டினை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. நியூசிலாந்து சார்பில் ஜார்ஜியா பிலிம்மர் 53(44) ஓட்டங்களையும், அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 34(31) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியீட்டியது. போட்டியின் ஆட்ட நாயகியாக நியூசிலாந்தின் ஜார்ஜியா பிலிம்மர் தெரிவு செய்யப்பட்டார்.
குழு Aயில் உள்ள நியூசிலாந்து மகளிர் அணி பங்கேற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றியீட்டி, புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திலுள்ளது. இலங்கை மகளிர் அணி பங்குபற்றிய நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து, உலக கிண்ணத்திலிருந்து வெளியேறியது.