இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இன்று(13.10) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. பத்தும் நிஸ்ஸங்க 11(10) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸ் 18(16) ஓட்டங்களுடனும், குசல் ஜனித் பெரேரா 6(3) ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மென்டிஸ், சரித அசலங்க இருவரும் இணைப்பட்டமாக 82 ஓட்டங்களை பெற்றனர்.
அரைசதம் கடந்த கமிந்து மென்டிஸ், சரித அசலங்க இருவரும் முறையே 51(40), 59(35) ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தனர். 22 மாதங்களின் பின்னர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட பானுக ராஜபக்ஷ, இறுதி ஓவர்களில் 11 பந்துகளில் 17 ஓட்டங்களை அணிக்கு பெற்றுக் கொடுத்தார். இதன்படி, இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் பந்து வீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுக்களையும், ஏனைய பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
180 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். பிராண்டன் கிங், எவின் லூயிஸ் இருவரும் முதலாவது விக்கெட்டிற்காக 107 ஓட்டங்களை இணைப்பட்டாமாக பெற்றனர். பிராண்டன் கிங் 62(33) ஓட்டங்களுக்கும், எவின் லூயிஸ் 50(28) ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இலங்கை பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும், மேற்கிந்திய தீவுகள் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, கமிந்து மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும், மதீஷ பத்திரன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
மேற்கிற்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய தீவுகளின் பிராண்டன் கிங் தெரிவு செய்யப்பட்டார்.