2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் தீர்மானமிக்க போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றியீட்டி அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றது. அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் அவுஸ்ரேலியாவும், அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்குடன் இந்தியாவும் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு(13.10) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி அவுஸ்ரேலியா 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. அவுஸ்ரேலியா சார்பில் கிரேஸ் ஹாரிஸ் 40(41) ஓட்டங்களையும், தஹ்லியா மெக்ராத், எலிஸ் பெர்ரி ஆகியோர் தலா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியா சார்பில் பந்து வீச்சில் ரேணுகா சிங், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
152 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கவுர் 54(47) ஓட்டங்களையும், தீப்தி சர்மா 29(25) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியா மகளிர் சார்பில் அன்னபெல் சதர்லேண்ட், சோபி மோலினக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதன்படி, அவுஸ்ரேலியா மகளிர் அணி 9 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், 2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகியாக அவுஸ்ரேலியாவின் சோபி மோலினக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
குழு Aயில் உள்ள இந்தியா பங்கேற்ற 4 போட்டிகளில் இரண்டில் வெற்றியீட்டி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது. இருப்பினும், புள்ளிப்பட்டியலில் முறையே மூன்றாம், நான்காம் இடங்களிலுள்ள நியூசிலாந்து மூன்றில் இரண்டு போட்டிகளிலும், பாகிஸ்தான் மூன்றில் ஒரு போட்டியிலும் வெற்றியீட்டியுள்ளன.
நாளை(14.10) நடைபெறவுள்ள நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும். பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு, இந்த போட்டியில் வெற்றியீட்டுவதுடன், இந்தியாவை விடக் கூடிய Net Run Rate புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.