எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(14.10) இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 18ம் திகதி தபால் மூலம் வாக்களிப்பதற்கும் தேர்தல் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில், 8 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்களுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த 12ம் திகதி தபால் நிலையங்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. அவை எதிர்வரும் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
எல்பிட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நான்காவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, பிரதேச சபையின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதியுடன் நிறைவடைந்தது.
இருப்பினும் சிறப்பு வர்த்தமானியின் ஊடக எதிர்வரும் நவம்பர் 4ம் திகதி வரை எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.