குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்(CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை, மத்திய குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வு பணியகத்தின்(Central Criminal Intelligence Analysis Bureau) பணிப்பாளராக நியமித்தமை தொடர்பில் ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிலையம் (IRES) கேள்வி எழுப்பியுள்ளது.
அரசாங்கத்தினால் கடந்த 10ம் திகதி ஷானி அபேசேகரவுக்கு வழங்கப்பட்ட நியமனம் குறித்து ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் அமைப்பில் ஷானி அபேசேகர இணைந்து பணியாற்றியதாகக் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியான பின்பு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.
ஷானி அபேசேகர சேவையில் இருக்கும் போது திறமையான அதிகாரியாகக் கருதப்பட்டாலும், பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் நடைபெறும் முதல் பாராளுமன்ற அமர்வின் பின்னரே குறித்த நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிலையம் (IRES) தெரிவித்துள்ளது.