2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நியூசிலாந்து தகுதிபெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியதனுடாக நியூசிலாந்து மகளிர் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டது. இந்த போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு(14.10) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி நியூசிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து சார்பில் சுசி பேட்ஸ் 28(29) ஓட்டங்களையும், புரூக் ஹாலிடே 22(24) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் சார்பில் பந்து வீச்சில் நஷ்ரா சந்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
111 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 56 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் அணித் தலைவி பாத்திமா சனா 21(23) ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து சார்பில் பந்து வீச்சில் அமெலியா கெர் 3 விக்கெட்டுக்களையும், ஈடன் கார்சன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, நியூசிலாந்து மகளிர் அணி 54 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியதுடன், 2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகியாக நியூசிலாந்ததின் ஈடன் கார்சன் தெரிவு செய்யப்பட்டார்.
குழு Aயில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்ட நிலையில், இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்தியா மகளிர் அணி பங்கேற்ற 4 போட்டிகளில் இரண்டில் மாத்திரம் வெற்றியீட்டியது.