விவசாயத்துறைக்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் தேவை – ஜனாதிபதி

விவசாயத்துறைக்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் தேவை - ஜனாதிபதி

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (16.10) இடம்பெற்ற விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வின் போதே
அவர் இதனைக் கூறினார்.

அந்த அமைச்சுகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆய்வு செய்த ஜனாதிபதி, அத்திட்டங்கள் ஓரளவு வெற்றியடைந்தாலும் அதன் மூலம் கிராமப்புற வறுமை எந்த அளவிற்கு தீர்க்கப்பட்டுள்ளது என்ற கேள்வியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே எதிர்காலத்தில் கிராமிய வறுமையை ஒழிப்பதே கிராமிய அபிவிருத்தித் திட்டங்களின் பிரதான இலக்காக இருக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க புதிய விரிவான வேலைத்திட்டத்தின் தேவையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

வறுமை என்பது பணப் பற்றாக்குறை மாத்திரமின்றி, சமூகத்தில் ஒரு பிரிவினரை ஓரங்கட்டுவது மற்றும் ஒரு பாரிய சமூகப் பேரழிவு என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான இலக்குமயப்பட்ட வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version