பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத நான் ஐந்து வருடங்கள் எங்கே சென்றேன் எனக் கேட்கின்றனர். பாராளுமன்றம் சென்ற எமது மலையக பிரதிநிதிகள் என்ன செய்தனர் என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் கேள்வி எழுப்பினார்.
தலவாக்கலையிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று (17.10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மலையக பிரதிநிதிகள் தொலைக்காட்சி விவாதங்களில் கூட அடித்துக் கொள்ளும் நிலைமை அல்லவா காணப்பட்டது.
பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து களமிறங்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. எனினும், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பின்னர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தேன். அப்போது ரஞ்சன் ராமநாயக்க என்னை அழைத்து பேசினார்.
ஊழல் அற்ற அரசியலை செய்வதற்காக புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாகக் கூறினார். அதில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டார். ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற அந்த கட்சியின் கொள்கை பிடித்திருந்தது. அதனால் தான் அக்கட்சி ஊடாக களமிறங்கியுள்ளேன்.
எனது தந்தை அமரர் சந்திரசேகரனின் வழியிலேயே நான் பயணிக்கின்றேன். கொள்கை அரசியலை முன்னெடுத்த தலைவரின் மகள் நான். எனவே, கோடிகளுக்கு விலை போனவர்கள் தான் இன்று கோடிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மலையக மக்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை என என்னை பற்றி அறியாத சிலரே விமர்சிக்கின்றனர். திரைமறைவில் பல நலன்புரி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றேன். அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை. இதற்கு நலன்விரும்பிகளும் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை நிச்சயம் மாற்றம் வரும். பழைய அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்தது போதும், இளைஞர்கள், புதியவர்கள் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனர். எனவே, மக்களுக்காக குரல் கொடுக்கும் என்னை அவர்கள் சபைக்கு அனுப்பி வைப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவேன்” என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.