தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்குப் பொருத்தமற்றது – சிவசக்தி ஆனந்தன்

தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்குப் பொருத்தமற்றது - சிவசக்தி ஆனந்தன்

“தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை என்று ஒன்று இல்லை. வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை மற்றும் இலஞ்சம் ஊழல் போன்ற பிரச்சினைகள் மாத்திரமே இருக்கிறது என்றும் எல்லோரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்ற பொதுப்படையான கருத்தைத் தான், கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கம் முன் வைக்கிறது” என ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்டக் காரியாலயத்தில் இன்று (21.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்:

” வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற மிகப் பலமான கட்சியானது, சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மட்டுமே. தமிழ் மக்களுக்குக் கடந்த எழுபத்தைந்து வருட காலமாக ஒரு தேசிய இனப்பிரச்சினை இருந்து வருகிறது. அந்தத் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அதற்காகப் பாடுபட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியால் மாத்திரமே முடியும்.

அதனடிப்படையிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தோம். இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரம் மக்கள் எங்களுக்கு வாக்களித்திருந்தார்கள். அதே போன்று இந்தப் பாராளுமன்றத் தேர்தலிலே ஒரு இரட்டிப்பான ஆதரவைத் தமிழ் மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்.

வடக்கு கிழக்கிலே போட்டியிடுகின்ற அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள், தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய இனப்பிரச்சினை இல்லை என்கிற அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழ் மக்கள் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும்” என ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version