அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள்

அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள்

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு றியர் அட்மிரால் வை. ஆர்.சேரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய றியர் அட்மிரால் பீ.விதான 55 வயது பூர்த்தியடைந்தமையால் கடந்த 13ம் திகதி ஓய்வு பெற்றுள்ளார்.

அதற்கமைய, வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தற்போது கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் றியர் அட்மிரால் வை. ஆர்.சேரசிங்கவை நியமிப்பதற்காகப் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கமைய கீழ்வரும் நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • தற்போது திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர உத்தியோகத்தரான எச்.சீ.டீ.எல்.சில்வா திறைசேரியின் பிரதிச் செயலாளராக நியமித்தல்
  • தற்போது பிரதிச் செயலாளராகக் கடமையாற்றும் ஆர்.எம்.பீ.ரத்னாயக்க ஓய்வு பெற்ற பின்னரான வெற்றிடத்திற்கு தற்போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான டீ.ஏ.பீ.அபேசேகரவை நியமித்தல்
  • எச்.சீ.டீ.எல்.சில்வா திறைசேரி பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டமையால் வெற்றிடமான திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது அரச நிதித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர அதிகாரியான ஏ.என்.ஹபுகலவை நியமித்தல்.
  • தற்போது கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தின் பதில் கடமையிலுள்ள பணிப்பாளர் நாயகமாகக் கடயைாற்றிய இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான என்.எஸ்.எம்.பீ.ரஞ்சித்தை குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமித்தல்
  • தற்போது வெற்றிடமாகவுள்ள தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்குக் குறித்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான ஜே.எம்.எஸ்.டீ.ரத்னாயக்கவை நியமித்தல்.

இதேவேளை, மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகப் பதவிக்குக் கலாநிதி ரீ.எம்.ஜே.நிலான் குரேவை நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய பேராசிரியர் காமினி ரணசிங்க பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளமையால், குறித்த பதவி வெற்றிடம் நிலவுகின்றது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொல்லியல், சோதிடவியல், தொல்லியல் பாதுகாப்புத் துறைகளில் பயிற்சி பெற்றுள்ளவரும், அனுபவங்களுடன் கூடிய, வெளியீட்டுக் கருத்திட்டங்கள் மற்றும் கல்விசார் ஆய்வுகள் பலவற்றுக்குத் தலைமைத்துவம் வகித்து வழிகாட்டல்களை வழங்கியுள்ள கலாநிதி ரீ.எம்.ஜே.நிலாள் குரே குறித்த பதவிக்குத் தகைமையுடையவரென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவரை மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப்பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபைக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக, கீழ்க்காணும் நான்கு பேரை நியமிப்பதற்கும், அவர்களில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளராக கலாநிதி. பந்துர திலீப விதாரண நியமிப்பதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • கலாநிதி. பந்துர திலீப விதாரண – இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்
  • டப்ளிவ்.ரவி பிரசாத் டி மெல் – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்
  • கலாநிதி நாமலி தரங்கா சிரிசோம – கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்
  • ஏ.ஐ.யூ. பெரேரா – உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version