ஒற்றை ஆட்சி முறைமையைக் கொண்டுவர முயற்சிக்கும் அரசாங்கம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஒற்றை ஆட்சி முறைமையைக் கொண்டுவர முயற்சிக்கும் அரசாங்கம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ் மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த் தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்த வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்று(28.10) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா, தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர இருப்பதாகச் சர்வதேச மட்டத்திற்குக் கூறியுள்ளார். அந்த அரசியலமைப்பு 2015 ஆம் ஆண்டு. மைத்திரிபால சிறிசேன ரனில் விக்ரமசிங்க அவர்களுடைய காலப்பகுதியிலே. நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சி.

அந்த காலகட்டத்திலே அந்த முயற்சியிலே ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டு ஸ்தம்பிக்கப்பட்டது காரணம் அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரனில் விக்கிரமசிங்காவை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கினார்.

அந்த பிரச்சனை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உச்ச நீதிமன்றம் ரணில் விக்ரகமசிங்காவின் பதவிநீக்கம் பிழை என்று தீர்ப்பளித்து மீண்டும் அவர் பிரதமர் ஆனார். ஆனால் அந்த குழப்பம் நடைபெற்றதற்குப் பிற்பாடு அந்த புதிய அரசியலமைப்பிற்கான முயற்சியை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஆகவே இன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிற அனுர குமார திசாநாயக்கா மிகத் தெளிவாக எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் அந்த 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த முயற்சியைத் தான் முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதிலே நாங்கள் தெளிவாகப் பார்க்கக் கூடியது. அந்த இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு. ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியலமைப்பு அறிமுகப்படுத்துகிறதா இல்லையா என்று. அந்த இடைக்கால அறிக்கையை நீங்கள் எடுத்துப் பார்த்தால் அறிக்கையினுடைய முன்னுரையாக,அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில்,

பாராளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதிலே செய்த முதலாவது உரையைத்தான் அதனுடன் அவர்கள் இணைத்து இருக்கிறார்கள்.

காரணம் அதுதான் அந்த முயற்சியினுடைய நோக்கத்தைக் குறிக்கின்ற. ஒரு பேச்சு. அந்தச் சட்டத்தினுடைய இலக்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஒரு அறிமுகம் என்பது இருக்கும். அந்த வகையிலே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியிலே மைத்திரிபால சிறிசேனவுடைய பேச்சைத் தான். முன்னுரையாக அவர்கள் அதிலே இணைத்தார்கள்.

அந்த முன்னுரையில் மைத்திரிபால சிறிசேன தெளிவாகக் கூறுகின்றார் இலங்கை ஒரு ஒற்றை ஆட்சி நாடு. இலங்கையினுடைய இன்றைய அரசியல் அமைப்பு மாத்திரம் அல்ல. கடந்த மூன்று அரசியலமைப்புகளும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பாகத் தான் இருந்துள்ளதென்று.

இன்று அந்த ஒற்றையாட்சி முறைமையைத்தான் புதிய ஜனாதிபதி நிறைவேற்ற இருக்கின்றார். அதுதான் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால், அதை எதிர்ப்பதாக இருந்தால் அதைச் செய்யக்கூடிய,செய்யத் தயாராக இருக்கின்ற ஒரே ஒரு அணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே அவ்வாறு நிகழ வேண்டும் என்றால் வடகிழக்கிலே சைக்கிள் சின்னம் குறைந்தது 10 ஆசனங்களைப் பெற வேண்டும். 18 ஆசனங்களில் 10 என்றால் மட்டுமே பெரும்பான்மை. அதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தது இரண்டு ஆசனங்களைச் சைக்கிள் கட்சி பெற வேண்டும்.

வன்னித் தேர்தல் தொகுதியிலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் தெரிவு செய்தே ஆக வேண்டும். வன்னியிலே தெரிவு செய்யப்படும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த நான்கு பேரில் இரண்டு பேர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளாக இருந்தால் மட்டுமே. ஒற்றை ஆட்சியை எதிர்க்கக் கூடிய பலத்தோடு நம்முடைய அணி பாராளுமன்றத்திற்குச் செல்லும். அது ஒரு சாதாரண விடயம் அல்ல.

நாங்கள் வெறுமனே தேர்தலில் போட்டியிட்டு எத்தனையோ ஆசனங்களை வென்று இருக்கிறோம் என்று புகழ் பாடுகின்ற ஒரு அமைப்பு அல்ல. எங்களுக்கு என்று ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிற ஒரு அமைப்பாகத் தான் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அந்த இரண்டு ஆசனங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தால் மன்னார் மாவட்டம்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அந்த பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்தே ஆக வேண்டும். இதுவரைக்கும் இந்த மண்ணிலே சாதிக்காத ஒரு விடயத்தைத் தமிழ் இனத்துக்காக நாம் சாதித்தே ஆகவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன் ஆசிரியர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டச் செயலாளர் விக்ரர் தற்குரூஸ் மற்றும் அக்கட்சியின் மன்னார் வேட்பாளர் சோமநாதன் பிரசாத் உட்பட அனைத்து வேட்பாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version