முறைமை மாற்றத்தால் தீர்வு கிடைக்கவில்லை சஜித் குற்றச்சாட்டு

முறைமை மாற்றத்தால் தீர்வு கிடைக்கவில்லை சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை பிரதேச கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று நேற்றைய (03.11) தினம் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எமது நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தையும், உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தையும் மீளப் பெற்று, மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தில் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, எமது நாடு எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வை தருவோம் என தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் தரப்பினர் கடந்த காலங்களில் பிரஸ்தாபித்தனர்.

திருடிய பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள் என கருதினாலும், நகைச்சுவைகளைக் காட்டி நாட்டை கொண்டு நடத்த முடியாது.

தேர்தல் மேடைகளில் கடவுச்சீட்டுக்கான வரிசைகளை நிறுத்துவோம் என்று வீராப்பு பேசினர். இன்னும் நிலையான தீர்வை வழங்கவில்லை. MMS, WhatsApp மூலம் செய்திகள் வந்தாலும் அதனால் பிரயோக ரீதியாக எந்தப் பயனும் இல்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வை வழங்காது வரிசையை நீடிக்கவே நடவடிக்கை எடுத்துள்ளனர். இங்கு மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றத்தால் இந்த கடவுச்சீட்டு வரிசைக்கு இந்த அரசாங்கம் தீர்வை முன்வைக்கவில்லை. முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்து வந்த முறையையே இவர்களும் பின்பற்றி வருகின்றனர்.

வரி குறைக்கப்படும், விலை சூத்திரங்கள் இல்லாதொழிக்கப்படும், உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணம் கொண்டு வரப்படும் என்று மேடைகளில் கூச்சலிட்டாலும், இறுதியில் ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் சர்வதேச நாணயத்திடம் மண்டியிட்டு எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அடிமையாகியுள்ளது.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களுக்கான விலையை குறைக்க வாய்ப்புள்ள நிலையில், அதை செய்யாமல் உயர் வர்க்கத்தினர் பயன்படுத்தும் எரிபொருளுக்கு மட்டும் இந்த வரியை குறைத்துள்ளனர்.

மோசடி, ஊழல், திருட்டு போன்றவற்றால் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்தவர்களே எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிமைகளாக மாறியுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version