அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனை கேட்கும் செயலமர்வு வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் தலைமையில் நேற்றைய தினம் (05.11.2024) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது என யாழ் மாவட்ட செயலக ஊடக பிரிவி தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியில் கருத்துத் தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மீள்குடியேற்ற பிரதேசத்தில் காணிகளை அடையாளம் கண்டு மின்சார இணைப்பை வழங்குவதில் சில பிரச்சனைகள் காணப்படுவதாக தெரிவித்ததுடன், ஏனைய மாவட்டங்கள் போல் காணி உரிமம் தொடர்பில் பிரச்சனைகள் இருந்தாலும் குடியிருப்பாளர்களுக்கான மின்சார இணைப்பை வழங்குவதில் ஒத்துழைப்புக்களை நல்கிவரும் இலங்கை மின்சார சபைக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டறியும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இச் செயலமர்வு நடைபெற்றது
இச்செயலமர்வு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜசந்தறது விதான, பிரதிப்பணிப்பாளர் றொசான் வீரசூர்ய, வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.பிரணவநாதன், வவுனியா, முல்லைத்தீவு,கிளிநொச்சி, மன்னாா் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உட்பட துறைசாா் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.