திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம்  நடவடிக்கை - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் ஆபத்தான முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச
குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு மத்திய கொழும்பு பிரதேச முஸ்லிம் மக்களுடனான சந்திப்பொன்று இன்று (09.11) சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. இங்கு கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தின் இந்த முடிவால் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அசௌகரியத்திற்கு ஆளாக நேரிடும்.
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு, 5 வயதுக்குட்பட்ட எடை குறைவான குழந்தைகள், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் திரிபோஷாவைப் பெற்று வருகின்றனர். மாதம் ஒன்றுக்கு 16 இலட்சம் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 664920 தாய்மார்களுக்கும் 925172 குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2403/53 மூலம் திரிபோஷ நிறுவனத்தை மூடுவதற்கு அல்லது வேறு நிறுவனத்துடன் இணைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளார்.

திரிபோஷ உற்பத்தியை வழங்கிய இந்த நிறுவனத்தை மூடுவதற்கு அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இயந்திரங்களின் திறன் திரிபோஷா உற்பத்தியை விட அதிகமாக இருப்பதால், இந்த நிறுவனம் மேலதிக உற்பத்திகளைச் செய்து ஆண்டுதோறும் 500 மில்லியனை அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

இவ்வவாறான ஒரு நிறுவனத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களின்படி மூடுவதற்கு செயற்பட்டு வருகிறது.

அண்மைகால வரலாற்றில், சகல அரசாங்கமும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் திரிபோஷாவை வழங்கியுள்ளன. தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பலமாக விளங்கும் திரிபோஷா தொழிற்சாலையை தற்போதைய அரசாங்கம் மூட நடவடிக்கை எடுத்துள்ளமையானது கவலையளிக்கிறது.

சாதாரண மக்களையும் ஏழைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எனக் கூறிக் கொள்ளும் இந்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே இதனைச் செய்கிறது. இதற்கு எதிராக போராடி இந்த முயற்சியை தோற்கடிப்போம்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்த இலஞ்சம், ஊழல்கள், திருட்டுக்களை கண்டுபிடிக்க முடியாது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி நியமித்த புதிய தலைவர் தெரிவிக்கிறார். நிதியமைச்சின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே எரிபொருள் விலையை குறைக்க முடியும்,
எரிபொருள் விலை குறைந்தால் நாடு வங்குரோத்தடைந்து விடும் என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறும்போது, ஜனாதிபதி அனுர உட்பட ஜே.வி.பி.யின் முன்னனணித் தலைவர்கள் பொய்களைக் கூறித் திரிகின்றனர்.

அவ்வாறே, நாட்டில் உள்ள ஆசிரியர்கள், மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்காத இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குமா என்பதில் சிக்கல் காணப்படுவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version