காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே மலையக மக்களுக்கு விடிவு – ஜீவன்

காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே மலையக மக்களுக்கு விடிவு - ஜீவன்

மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வீடல்ல காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே அவர்களுக்கான விடிவு காலம் கிடைக்குமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளோம். ஆனால் நாங்கள் என்ன செய்தோம் என சிலர் வினவுகிறார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்காக என்ன செய்தது என்பது மக்களுக்கு தெரியும்.

மலையக வரலாற்றில் இதுவரையில் இடம்பெற்ற அத்தனை உரிமை சார்ந்த விடயங்களையும் வென்றெடுத்ததில் இ.தொ. கவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. வரலாறை சொல்லி வாக்கு கோர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வீட்டு பிரச்சினை இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஆனால் 1972 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட 66,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் வீடமைப்பு விவாகரத்தில் மக்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைக்க வில்லை.

இந்த பிரச்சினைக்கு தீர்வு வீடல்ல. காணி. காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே எமக்கு விடிவு காலம் கிடைக்கும்.

நாங்கள் மக்கள் மத்தியில் நடிப்பதாக கூறுகிறார்கள். உண்மையில் மக்கள் மத்தியில் நடிப்பவர்களும் இருக்கிறார்கள். இதுவொரு வேடிக்கையான விடயம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்காக குரல் கொடுக்கிறோமே தவிர, அவர்களை விட்டுக்கொடுப்பதில்லை. மலையகத்தின் பிரதிநிதித்துவத்தை மக்களே பாதுகாக்க வேண்டும். இன்றிருக்கும் சூழ்நிலையில் நமக்குள்ளேயே பிரிவினையை உருவாக்கிகொண்டால் எதிர்காலம் சிக்கலாக மாறும்.

தோட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது இல்லை. அந்த இளைஞர்களை புறக்கணித்து ஓரங்கட்டுகிறார்களே தவிர அவர்களுக்காக எவரும் குரல் கொடுப்பதில்லை.

இன்றிருக்கும் சூழ்நிலையில் நாம் இன்னும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வில்லை. ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் தேசிய பட்டியலில் வர போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். அப்படியிருக்கையில் அவரின் ஆலோசனை நாட்டுக்கு தேவைப்படும். அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். ஆனால் இன்றிருக்கும் சூழ்நிலையில் கண்டிப்பாக விலைவாசி அதிகரிக்கவே செய்யும்.

அப்படி இருக்கையில் மக்கள் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டவர்களுக்கு கண்டிப்பாக மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும். மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும். அதுதொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version