வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தால் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ரிசாட் பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகாக நேற்றிரவு 8.00 மணியளவில் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள், கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.
இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ரிசாட் பதியூதீனின் வாகனத் தொடரணி அடித்து நொறுக்கப்பட்டது. அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொறுக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்த பகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலவர நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.