அளிக்கப்படும் வாக்குகள் முறையாக எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.11) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த உறுதியை அளித்தார்.
அமைதியான காலப்பகுதியில் தேர்தல் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், அமைதியானதொரு தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெறாத பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தற்போது அவற்றைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இ-சேவை இணையதளத்திற்குச் சென்று, தங்களது வாக்காளர் அட்டைகளைப் பதிவிறக்கம்
செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் வாக்கு எண்ணல் இடம்பெறும் போது முடிந்தவரை வீடுகளில் இருக்குமாறும், குறித்த காலப்பகுதியில் பட்டாசு கொளுத்துதல், அநாவசியமாக ஒன்றுகூடல் என்பவற்றைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே வாக்களித்த பின்னர் அமைதியான முறையில் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.