தமிழர் விடுதலைக் கூட்டணி உயிர்ப்பற்று போயிருந்த நிலையில், மீண்டும் அதனை மீட்டு எடுத்து மீளுருவாக்கம் செய்யும் பணியை தான் ஆரம்பித்திருந்தாகவும், இந்த தேர்தலில் அது வெற்றியளித்துள்ளது எனவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்ச்சியான பயணத்துக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் கணேசனாதன் சபேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கீழ்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பல சவால்களுக்கு மத்தியில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் இவற்றை செயற்படுத்தினேன். பாரளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டி வெற்றி பெற முடியாமல் போனாலும், எமது கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள் எனக்கு சந்தோசத்தை வழங்குகிறது. தமிழ் மக்கள் எமது கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இதனைத்தான் இந்த தேர்தலில் நான் எதிர்பார்த்திருந்தேன்.
இலங்கை அரசியலில் வரலாறு காணாத மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்லவை நடக்கும் என நேர் சிந்தனையோடு முன்னேறுவோம். அடுத்த ஐந்து ஆண்டுகள் இதுதான் என்பதனை மாற்றுவது இயலாது. தமிழ் மக்கள் இந்த மாற்றத்தை உருவாக்க, ஏற்படுத்த நம் அரசியல்வாதிகளே காரணம். பதவிப்போட்டிகளுக்கான பிரிவினையை ஏற்படுத்தி ஒட்டு மொத்தமாக தோற்றுப்போயுள்ளனர். இந்த பிரிவினையை எமது கட்சி மூலமாகவே ஆரம்பித்தார்கள். தற்போது அனைவரும் உடைந்து போயுள்ளனர். பணம் மற்றும் இதர சதிகளினால் இன்று தமிழ் அரசியலே சிதைந்து போயுள்ளது. இம்முறை தேர்தலில் எமது கட்சி எந்தவித பிற சகதிகளது தலையீடோ, பணத்துக்காக விலைபோகாமல் நேர்மையாக தேர்தலை சந்த்தித்தோம்.
தமிழ் தரப்புக்குள் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரையும் ஒன்றிணைக்க, பிரிவினைவாதிகளை இல்லாமல் செய்து இளையவர்களுகும், புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்வே தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. இனிவரும் அரசியலை நல் வழியில் கொண்டு செல்ல தமிழர் விடுதலைக் கூட்டணியை இலங்கை பூராகவும் விஸ்தரிக்க நீங்கள் எமக்கு தந்துள்ள வாக்குகள் மூலம் ஆணையை வழங்கியுள்ளீர்கள். வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இதனை தவிர என்னிடம் தருவதற்கு வேறு எதுவுமில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணி வரலாற்று பின்னணி கொண்ட கட்சி. இந்த கட்சியினை சிதைத்தார்கள். ஆனால் மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. படிப்படியாக இந்த கட்சியினை வளர்த்தெடுத்து, விருட்ஷமாக மாற்றி எம்மவர்களது கைகளில் வழங்குவதே எனது திட்டம். தேர்தல் நிறைவடைந்துவிட்டது. தமிழ் மக்கள், அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டுமென்ற பாடம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி அனைவரையும் ஒன்றிணைக்க காத்திருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஒன்றிணைந்து புதிய அரசியல் பாதையில், தமிழ் மக்களுக்காக தமிழர்களாக பயணிப்போம்.