சஜித் பிரேமதாச மற்றும் IMF பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

சஜித் பிரேமதாச மற்றும் IMF பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் இன்று இடம்பெற்றது.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

தற்போது மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் ஜனாதிபதியும் உள்ளதால், முன்னாள் அரசாங்கம் கையெழுத்திட்ட சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, மக்கள் சார் உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்த வேண்டும் என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னதாகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ​​சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் பலர் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் பல சந்தர்ப்பங்களில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, ஹர்ஷன ராஜகருணா, எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கென்னடி குணவர்தன மற்றும் பொருளியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உயர் மட்டக் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர், துணைப் பிரதானி , வதிவிடப் பிரதிநிதி மார்த்தா வோல்டெமிகல் மற்றும் வதிவிட பொருளாதார நிபுணர் மானவி அபேவிக்ரம ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version