வருமானமீட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பமில்லை – அனுர

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்காலம் தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இன்று (22.11) பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் பணிக்குழாம் முன்னிலையில் ஆற்றிய உரையிலேயே இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு நிதியமைச்சின் அதிகாரிகள் வழங்கிய பங்களிப்பை நன்றியுடன் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்கால இலக்குகளை அடைவதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

அரசியல் மாற்றங்களின் போது அரச ஊழியர்களை முன்னைய செயற்பாடுகளை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்த வரலாறுகள் உண்டு எனவும் ஆனால் இனிவரும் காலங்களில் அரச ஊழியர்கள் ஆற்றப்போகும் பணியே அவர்களை மதிப்பீடு செய்யும் காரணியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் அநீதி அல்லது தவறுகள் இடம்பெற்றால் அவர்களுக்காக முன்னிலையாவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

வருமானம் ஈட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பம் இல்லை என்றும், அந்த நிலைப்பாட்டினை மாற்றுவது கடினமானது என்ற போதிலும், தம்மைப் பற்றி ஏதேனும் மோசமான விம்பம் இருக்குமாயின், புதிய அரசாங்கத்தின் கீழ் அந்த அனைத்து அதிகாரிகளும் தம்மைப் பற்றிய விம்பங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஊடகங்களுக்கு முன்பாக அதிகாரிகளை அச்சுறுத்துவது, அவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும், சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதே புதிய மாற்றத்தின் அணுகுமுறையாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக ஒன்றுபடுமாறு அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version