யாழில் வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம்

யாழில் வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்றைய தினம் (28.11.2024) பி. ப 03.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளை ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத் தூயகொந்த, அதிமேதகு சனாதிபதி அவர்கள் இயற்கை அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மருந்துகள் இடையூறு இன்றி சீராக விநியோகிக்க திறைசேரி விசேட ஒதுக்கீடுகளை காலதாமதமின்றி ஒதுக்க அறிவுறுத்தியுள்ளார் எனவும், இயற்கை அனர்த்தத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று தீர்வுகள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் என கூறினார்.

சகல மாவட்டங்களிலும் முப்படையினர் போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட க. பொ. த உயர்தரப் பரீட்சையானது டிசெம்பர் மாதம் 04 ஆம் திகதியிலிருந்து நடாத்த பரீட்சைத் திணைக்களத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணம் உட்பட அவ் மக்களுக்கு கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நோய் மற்றும் ஏனைய தொற்றுநோய்கள் வராமல் தடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் மேலும் தெரிவிக்கப்பட்டது. அவர் மேலும் தெரிவிக்கையில் இயற்கை அனர்த்ததிலிருந்து பாதுகாக்க நிரந்தர தீர்வானது அனைவருடனும் இணைந்து காண வேண்டும் எனவும் இதற்கு முப்படையினரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பாகவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது யாழ் மாவட்ட செயலக ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படையினர், கடற்படையினர், விமானப் படையினர் மற்றும் பொலிசார் போதிய ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் துறைசார் திணைக்களத் தலைவர்களால் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியினைத் தெரிவிப்பதாகவும், பாதுகாப்பு நிலையங்களில் இல்லாமல் பாதிக்கப்பட்டு வீடுகளில் இருப்போர்கள் குறிப்பாக கடற்றொழி்லாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கும் உதவிகள் வழங்க ஒன்றிணைந்து நடவடிக்கைகள்மேற்கொள்வோம் எனவும், பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறையில் மின்கம்பங்கள் விழும் நிலையில் உள்ளதாகவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி பாரிய சேதமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு துறைசார்ந்த திணைக்களங்கள் நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மழைகாலம் முடிவடைந்த பின்னர் கிணறுகளை சுத்தப்படுத்த படையினரின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதற்கு சட்டத்திற்கு மாறாக கட்டப்பட்ட கட்டடங்களும் காரணம் எனவும், அவற்றை அகற்ற நடவடிக்கைகளை மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எடுக்க வேண்டும் என்றும், எதிர்வரும் காலங்களில் வெள்ள அனர்த்தம் வராமல் இருக்க ஒன்றிணைந்து நடிவடிக்கைகள் எடுப்போம் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவோருக்கு நன்றியினைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு, முப்படைகளின் ஒத்துழைப்புக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.

இவ் விசேட கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் , வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியகுமார், முப்படைகளின் உயர் அதிகாரிகள், வடமகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version