இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்குமிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 131 ஓட்டங்களினால் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களை பெற்றது. இதில் சாருஜன் சண்முகநாதன் அபாரமாக துடுப்பாடி சதத்தை பூர்த்தி செய்தார். ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிய வேளையில், நிதானம் காத்து மிகவும் அபாரமாக துடுப்பாடி சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 102 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த்தார். 132 பந்துகளில் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொடுத்தார். சர்வதேச அரங்கில் இது அவரின் முதற் சதமாகும். இறுதி ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்க சதம் அடித்த அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட் ஓட்டமின்றி முதல் ஓவரில் வீழ்த்தப்பட ஜோடி சேர்ந்த சாருஜன், புலிந்து பெரேரா ஆகியர் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர். புலிந்து பெரேரா 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். விமத் டின்சார 26 ஓட்டங்களையும், லக்வின் அபேயசிங்க 16 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். AM காஷான்பர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 28.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றது. நைஸ்புள்ளா அமிரி 33 ஓட்டங்களையும், ஹம்ஸா கான் 32 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரவீன் மனிஷ 3 விக்கெட்களையும், ரஞ்சித்குமார் நியூட்டன் 2 விக்கெட்களையும், விரான் சமுத்தித 2 விக்கெட்களையும், விகாஷ் தேவ்மிக்க 2 விக்கட்களையும், குகதாஸ் மாதுளன் 1 விக்கெட்டையும் கையைப்பற்றினார்கள்.
கடந்த போட்டியில் இலங்கை அணி நேபாளம் வெற்றி பெற்றபோது கூடுதலான 62 ஓட்டங்களை பெற்று போட்டியின் நாயகனாக தெரிவான சாருஜன், இன்று சதத்தோடு 4 ஆட்டமிழப்புகளையும் ஏற்படுத்தி போட்டியின் நாயகனாக தெரிவானார்.