அமைச்சர் சரோஜா போல்ராஜ் மன்னார் விஜயம்.

அமைச்சர் சரோஜா போல்ராஜ் மன்னார் விஜயம்.

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்து தொடர்ந்து தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பிச் செல்ல முடியாது பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதார பயன்பாட்டுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இன்றைய தினம்(01.12) ஞாயிறு, அமைச்சர் சரோஜா போல்ராஜுடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி நாமல் லக்ஸமன , பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க ஆகியோரும், அமைச்சின் செயலாளர்களும் வருகை தந்திருந்தனர். இந்த குழுவினரை மன்னார் நகர பிரதேச செயலாளர் எம் பிரதீப், மன்னார் மாவட்ட செயலக மேலதிக செயலாளர் (காணி)ஸ்ரீஸ்கந்தகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள எழுத்தூர் பாடசாலை, செல்வநகர் , இந்து ஆலயம். புதுக்குடியிருப்பு பாடசாலை ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். அமைச்சர் உட்பட்ட குழுவினர் அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடியதுடன் தொண்டு நிறுவனங்களால் கொண்டு வரப்பட்ட  அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

“அரசு பொறுப்பேற்றதுடன் மக்களுக்கு பல அபிவிருத்தி வேலைகளை செய்ய வேண்டும் என்ற அபிலாசையில் இருந்து வருகின்றது. தற்பொழுதுள்ள காலநிலை மாற்றம் காரணமாக எமது மக்கள் வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” என இங்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மக்களுக்கு தெரிவித்தார்.

பாதிப்டைந்துள்ள மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.  அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இதற்கு துணைபுரிய வேண்டிய அவசியம் உண்டு. பாதிப்டைந்துள்ள நீங்கள் மீளக்குடியேற பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகம் மற்றும் அணைத்து அமைச்சுக்களும் யாவரும் ஒன்றிணைந்து செயல்பட இருக்கின்றோம் என உறுதியளித்த அமைச்சர் சரோஜா பாதைகள் உங்கள் இல்லங்கள் மற்றும் உங்கள் அன்றாட உணவு விடயங்கள் சுகாதார தேவைகள் போன்றவற்றில் இந்த அரசு கவனம் செலுத்தி தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது என மேலும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக சுகாதார தேவைகள் உணவுப் பொதிகள் உட்பட ஏனைய நிவாரணங்களும் வழங்கப்படுவதாகவும், இதற்கு துணையாக ஜெயிக்கா நிறுவனம் , சாக் நிறுவனம், மற்றும் யுஎன்டிபி நிறுவனங்கள் உதவி புரிகின்றன எனவும் அமைச்சர் கூறினார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply