வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுவதுடன், புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.