முல்லைத்தீவு மாவட்ட’ பண்பாட்டுப் பெருவிழா’மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட' பண்பாட்டுப் பெருவிழா'மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட செயலகம், துணுக்காய் பிரதேச செயலகம், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி சபைகள் இணைந்து நடாத்திய முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா சிறப்பான முறையில் நேற்றையதினம்(11.12) துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சி.திருவாகரன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முதலானோர் பாரம்பரிய கலைகளுடனும், மக்களின் வாழ்வியல் மாதிரி ஊர்திப் பவணிகளுடனும் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் அவர்களின் சிறப்பான ஒழுங்குபடுத்தல் மற்றும் இயற்கை முறையிலான விழா அலங்கரிப்பு மிகச் சிறப்பான முறையில் அமைந்திருந்தது.

விழாவின் விசேட அம்சமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால்’ முல்லைச்சாரல்’ என்னும் கலாசார நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக கலைக்காற்றிவரும் சேவையினைப் பாராட்டியும் கௌரவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட மூத்த கலைஞர்களுக்கு ‘ முல்லை கலைக்கோ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது கலைகளோடு பிரகாசித்துக்கொண்டிருக்கும் இளங்கலைஞர்களுக்கு ‘முல்லை இளஞ்சுடர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இன்றைய இந்த விழாவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களிலும் இருந்து வருகைதந்த கலைஞர்கள், நடனம், இசைநடனம், கோலாட்டம், கூத்து முதலான ஆற்றுகைகளை மிகச் சிறப்பான முறையில் நிகழ்த்தியிருந்தார்கள்.

இந்த விழாவில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், ஓய்வு பெற்ற முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி லிசோ கேகிதா, கரைதுறைப்பற்று பிதேச செயலாளர், வெலிஓயா பிரதேச செயலாளர், உதவி பிதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், மூத்த கலைஞர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version