மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மடுதாதா, திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால், ஆயராக நியமிக்கப்பட்ட செய்தி, திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதியூடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, நேற்றைய தினம் (14.12) சனிக்கிழமை, மாலை 4.15 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டதை அறிவித்தார்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையினர், அருட்சகோதரிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு புதிய ஆயருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது 75 வது வயதில் ஓய்வு பெற்றுச் செல்ல உள்ள நிலையிலேயே, மன்னார் மாவட்டத்திற்குப் புதிய ஆயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மன்னார் மறைமாவட்டம் உருவாகி 43 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அருட்தந்தை முதன்முறையாக திருத்தந்தையால், ஆயராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version