வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில்,மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும்,கண்காட்சி நிகழ்வும் இன்றைய தினம் (17.12) காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்,வடக்கின் பண்பாட்டுக் கலைகள், சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய வாழ்கை முறைகளை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட ஊர்திகளோடும் பாரம்பரிய கலை நடனங்களோடும் விருந்தினர்கள், மன்னார் பிரதான பாலத்திலிருந்து,நகரமண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர்.
குறித்த நிகழ்வில், முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய பொருட்கள் மற்றும் நம்நாட்டுக் கலைஞர்களின் படைப்புகள் அடங்கிய கண்காட்சி
இடம்பெற்றதுடன் வடக்கு மாகாணத்தின் கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.
இதில் தேர்வு செய்யப்பட்ட வடக்கு மாகாண கலைஞர்கள் கலந்து கொண்டு “கலைக்குருசில்” மற்றும் “இளம் கலைஞர்” என்ற விருதுகளையும் பணப்பரிசில்களையும்,பெற்றுக்கொண்டனர்.
மேலும் இம்மாகாணப் பண்பாட்டுப் பெருவிழாவையொட்டி வடந்தை-2024 எனும் நூல் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில்,பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மற்றும் திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் வடக்கு மாகாண கலைஞர்கள் கலந்து கொண்டதுடன், வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பாரம்பரியத்தைப் பிரதி பலிக்கும் வகையில் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்