மன்மோகன் சிங்கிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

மன்மோகன் சிங்கிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் நேற்று (26.12) காலமானார் இந்நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மன்மோகன் சிங் ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணர் என்றும், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி என்றும், அவரது பங்களிப்புகள் இந்தியாவிற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“முன்னாள் இந்தியப் பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிறந்து விளங்கிய கலாநிதி மன்மோகன் சிங் நேர்மையாகச் செயற்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

“இந்திய மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். நவீன இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பியான ஒரு சிறந்த மனிதர், இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர் ” என சுமந்திரனும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version