கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி வரை குறித்த மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று (08/12) உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் மூவரும் கிண்ணியா – பெரியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த 40வயதுடைய முகமது அலி முகமது ரியாஸ், 35 வயதுடைய அப்துல் முத்தலிப் பஸ்மி மற்றும் ஜமால்தீன் முபாரக் ஆகியோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி மிதப்பு படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் மிதப்பு படகை செலுத்திய சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்சமயம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை குறித்த இழுவைப் படகை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிண்ணியா நகர சபை தவிசாளரின் வழக்கு நாளை (09/12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
(திருகோணமலை நிருபர்)