சுபீட்சம் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் – பிரதமர்

சுபீட்சம் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் - பிரதமர்

புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களான எங்களுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும். பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளனர் என அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமரின் வாழ்த்துச் செய்தியில்,

“பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற அடிப்படையில், பொருளாதாரம், தொழிற்துறை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு பிரஜையும் இனம், பாலினம் அல்லது மதம் என்ற பேதங்களைக் கடந்து அமைதியான, சுதந்திரமான , கண்ணியமான மற்றும் பரிபூரணமான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு கடந்த காலங்களில் எமக்கு பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. எனினும், குறித்த தருணங்களின் நன்மைகளை முழுவதுமாக அடைவதில் நாம் தோல்வி கண்டோம். எவ்வாறெனினும், அவ்வாறு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை தவற விடாது அவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இந்த நெருக்கடியான காலங்களிலும், பொதுமக்களுக்கு சேவையாற்ற அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது. முன்னேற்றமடையும் உறுதியுடன் அனைவரும் 2025ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் சவால்மிக்கதாக இருந்த போதிலும், குறித்த இலக்கை அடைவதற்கென பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். மலர்ந்துள்ள இந்த 2025ம் ஆண்டு அனைத்து பிரஜைகளுக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டுமென நான் வாழ்த்துக்கின்றேன்.

புத்தாண்டை வெற்றியுடன் ஆரம்பிப்பதற்கும், எமது நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் எம்முடன் இணையுமாறு புத்தாண்டை வரவேற்கும் இந்த தருணத்தில் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன். உலகத்தின் மத்தியில் அபிமானம்மிக்க, வளமான நாடாக ‘இலங்கை’ என்ற நாமத்தை மிளிரச் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்” என்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version