இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நியூசிலாந்து நெல்சனில் நடைபெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான 20-20 போட்டியில் இலங்கை அணி வலுவான ஓட்ட எண்ணிகையை பெற்றுள்ளது. 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி 20-20 போட்டிகளில் பெற்றுக்கொண்ட இரண்டாவது கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
குஷல் பெரேரா அபாரமாக அதிரடி நிகழ்தி 46 பந்துகளில் 101 ஓட்டங்களை பெற்றுகொண்டார். இது அவரின் முதல் 20-20 சதமாகும். இலங்கை அணி சார்பாக 20-20 போட்டிகளில் பெறப்பட்ட மூன்றாவது சதமாகும். சரித் அசலங்க 24 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இருவரும் 100 ஓட்டங்களை 45 பந்துகளில் அதிரடியாக பகிர்ந்தனர். குஷல் மென்டிஸ் 22(16) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 17(12) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஷகரி போக்ஸ், மிட்செல் சென்ட்னர், மட் ஹென்றி, ஜகோப் டபி, டெரில் மிச்சல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
குஷல் பெரேரா 20-20 போட்டிகளில் இலங்கை அணி சார்பாக 2000 ஓட்டங்களை கடந்த முதல் வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.