![கடவுச்சீட்டு வரிசை புது வருடத்திலும் தொடர்கிறது](https://vmedianews.com/wp-content/uploads/2024/08/blue-ocean-jaffna-project.jpg)
கடவுச்சீட்டுக்கான வரிசை 2025 இல் தீரும் என எதிர்பார்த்த போதும், அது தொடர்கதையாகவே உள்ளது. புதிய eகடவுச்சீட்டுக்கான விலை மனு ஜனவரி 01 ஆம் திகதி கோரவேண்டிய நிலை காணப்பட்ட போதும், அதனை செயற்படுத்த முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக தற்போது கையிருப்பிலுள்ள கடவுச்சீட்டுகள் 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கே போதுமானதாக கருதப்படுகிறது.
“புதிய விலை மனுக்கோரலை செய்வதா? அல்லது நீதிமன்றில் உள்ள வழக்கின் பிரகாரம் செயற்படுவதா? என இதனை ஆராய்வதற்காக நியமித்துள்ள அமைச்சரவை குழுவின் பரிந்துரைக்காக காத்திருக்கிறோம்” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால கருத்து வெளியிட்டுள்ளார். இந்த விடயத்துடன் மேலும் பல விடயங்களையும் பார்க்க வேண்டியதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் இந்த கடவுச்சீட்டு பற்றாக்குறை தொடர்பில் எவ்வாறு நடவடிக்கைள் எடுப்பது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் eகடவுச்சீட்டுக்கான விலை மனு கோரல் மூலம் ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், விண்ணப்பித்த இன்னுமொரு நிறுவனம் விலை மனுக்கோரல் நடவடிக்கை தவறானது என கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவற்றின் காரணமாக கடவுச்சீட்டு பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. அல்லது அதனை சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதர சிக்கல் நிலை காரணமாக பலர் வெளிநாடுகளுக்கு செல்வதன் காரணமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் அளவு சடுதியாக அதிகரித்தமையினால் கடவுச்சீட்டை உடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது டோக்கன் முறை மூலம் வழங்கப்படுகின்ற போதும் டோக்கன் 5 மாதங்களுக்கு பின்னரே கிடக்கின்றமையையும் சுட்டிக்காட்டத்தக்கது