வனவள திணைக்களம் மக்களுக்கு இடையூறு- சத்தியலிங்கம் MP

வனவள திணைக்களம் மக்களுக்கு இடையூறு- சத்தியலிங்கம் MP

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (16.01) மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வனவள திணைக்களத்தினால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள், மேய்ச்சல் தரை விவகாரம், சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் போதைப்பொருள் பாவனை, விலைக்கட்டுப்பாட்டு பிரச்சினை, காணிக்குரிய உரித்துக்கள் வழங்கப்படாமை, விடத்தல்தீவு பவளப்பாறை சுற்றுலா தளத்தினை அமைத்தல், யானை வேலி அமைத்தல், உள்ளக வீதிகள் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதன்போது வனவள திணைக்களத்தினால் பொதுமக்களுக்கும், மக்கள் நலன்சார் திட்டங்களுக்கும் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் விசனம் தெரிவித்ததுடன், வனவள திணைக்களத்தின் கடந்தகால செயற்திட்ட முன்னேற்றங்கள் என்ன எனவும் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், அடம்பன் – தேனுடையான் பிரதான வீதியை திருத்தம் செய்தல், வாமதேவபுரத்தில் உள்ள விவசாய வீதியினை திருத்தம் செய்தல், அடம்பன் GPS வீதி திருத்தம் மற்றும் மின்விளக்குகள் பொருத்தல், வேட்டையான்முறிப்பு பகுதியில் உள்ள கைப்பணிச்சங்கத்திற்கான மின் இணைப்பு வழங்கல், பாப்பாமோட்டை-பகலமுனை மற்றும் கீரிக்கரையான்பிட்டி ஆகிய இறங்குதுறைகளிற்கான வள்ள ஓடுபாதையினை விருத்தி செய்து மீன்பிடி தொழிலுக்கு உதவல், ஈச்சளவக்கை பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பாதுகாக்க அமைக்கப்பட்ட குளத்தின் வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் உரிய திணைக்கள தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், மேற்படி விடயங்களை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறும் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Dr.ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version