கனேடிய முதலீட்டுடன் 45 கபானா மற்றும் 54 அறைகளை கொண்ட கரையோர நட்சத்திர சுற்றுலா விடுதியாக 110 ஏக்கர் பரப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அவலோன் ரிசோட் (Avalon Resort) அதன் முதற்கட்டமாக இன்று 12 கபானாக்கள் திறந்து வைக்கப்பட்டன.
அவலோன் ரிசோட்டின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முல்லைத்தீவு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய முதலீட்டாளருமான அன்டன் சார்ள்ஸ் ஜெயந்தன் தலைமையில் மதத்தலைவர்களின் ஆசியுடன் இடம் பெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு சுற்றுலா விடுதியை திரை நீக்கி ஆரம்பித்து வைத்தார்.
சிலாவத்தை கிராமத்தின் முன்னோடிகள் 12 பேர்களது ஞாபகார்த்தமாக அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள 12 கபானாக்கள் முதன்மை விருந்தினரான அரசாங்க அதிபர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், சட்டத்தரணி தனஞ்சயன் மற்றும் பிரமுகர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அவலோன் ரிசோட் நட்சத்திர சுற்றுலா விடுதியானது வடமாகாணத்தில் பாரிய சுற்றுலா விடுதியாக எதிர்காலத்தில் அமையவுள்ளது எனவும் இன்றைய ஆரம்பமானது முல்லைத்தீவு மாவட்ட சுற்றுலாத் துறை வளர்ச்சியில் ஓர் மையிற்கல்லாக அமைந்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்கு இது வழிவகை செய்யும் எனவும் இதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடுகள் ஏற்படும் என நம்புவதாகவும் அது மட்டுமல்லாது முல்லைத்தீவு மாவட்ட வளர்ச்சிப் பாதைக்கு இது ஓர் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
மாவட்டத்தின் சமூக கலாசார பண்பாட்டு அம்சங்களை உள்வாங்கி சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாக் (Community-based ecotourism ) கோட்பாட்டிற்கு அமைவாக இச்சுற்றுலா விடுதி அமைந்துள்ளமை சிறப்பான விடயம் எனவும் தெரிவித்ததுடன் இவ்வாறான பாரிய முதலீட்டை முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள அவலோன் ரிசோட் இன் தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அன்டன் சார்ள்ஸ் ஜெயந்தனுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் உமாமகேஸ்வரன் தனது உரையில் கூறியிருதார்,
இந்நிகழ்வில் அவலோன் ரிசோட் இன் முகாமையாளர் கேதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் சிலாவத்தை கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.