
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களின்றி விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் இன்று(17.02) நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்தவொரு வாக்கும் பயன்படுத்தப்படவில்லை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 2 சரத்துகள், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
சட்டமூலத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் சரத்துகள் அரசியலமைப்பின் 12 (1)ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால் அது அரசியலமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய விசேட பெரும்பான்மையுடன் மாத்திரம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.