CID இல் இருந்து வெளியேறிய நாமல்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்று (26) காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 05 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 06 ஏர்பஸ் ஏ-330 விமானங்களையும், 08 ஏ-350 விமானங்களையும் வாங்கியபோது ஏர்பஸ் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இடையே நடந்த முறையற்ற நிதி பரிவர்த்தனை குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஏர்பஸ் தொடர்பாக வெளிநாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்த விமானங்களை விற்பனை செய்வதற்கு முன்பு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி நியோமாலி விஜேநாயக்கவுக்கு ஏர்பஸ் நிறுவனம் இலஞ்சம் கொடுத்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.

அந்தத் தகவலின்படி, விமான ஒப்பந்தத்திற்கு முன்னர், கபில சந்திரசேனவின் மனைவிக்கு 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் கொடுப்பது குறித்து ஏர்பஸ் கலந்துரையாடியதாகவும், அதே நோக்கத்திற்காக புருனேயில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு குறைந்தது 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்தது.

அதன்படி, சர்ச்சைக்குரிய பரிவர்த்தனை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியதுடன், 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இந்த சூழலில், சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version