நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமில்லை – ஜனாதிபதி

சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (28.02) நடைபெற்ற 2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருன்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமோ, பொதுமக்கள் கிளர்ச்சியை உருவாக்குவதன் மூலமோ, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காணும் கனவுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது என்றும், முடிந்தால் தற்போதைய அரசாங்கத்தின் நாகரிகத்தை மிஞ்சிச் செல்லுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சவால் விடுத்தார்.

அவ்வாறு இல்லாமல் பழைய அரசியலிலே இருந்தால் அரசியலை விட்டு விலகுவதை தடுக்க முடியாதெனவும் வலியுறுத்தினார்.

பாதாள உலகின் குற்ற குழுக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினரினதும் ஆசிர்வாதம் கிடைக்காதெனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இலங்கை இராணுவத்தையும் பொலிஸையும் தொழில்சார்புடைய இராணுவமாகவும் பொலிஸாகவும் மாற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, பாதுகாப்பு துறையின் எந்தவொரு இடமாற்றத்தையும் நட்பு மற்றும் அரசியல் அடிப்படையில் செய்யப்போவதில்லை என்றும் கூறினார்.

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு ஏழு தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் நியமனங்களை வழங்குவதால் புதிய பயணத்தை செல்ல முடியாது என்பதால் புதியவர்களுக்கு நியமனங்கள் வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version